கச்சிராயப்பாளையம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


கச்சிராயப்பாளையம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை- சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jan 2021 1:05 PM GMT (Updated: 2 Jan 2021 1:05 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன. சம்பந்தப்பட்டநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் கச்சிராயபாளையம் அருகே உள்ள செம்படாக்குறிச்சி கிராமம் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டு வீடுகளை சுத்தம் செய்து கொண்டு் இருந்தனர்.

அப்போது மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் செம்படாக்குறிச்சி காலனி பகுதிக்குள் திடீரென நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள வீடுகளை சூறையாடியதோடு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன பெண்களும், குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூறையாடப்பட்ட வீடுகள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிட்டனர்.

பின்னர் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் காலனி பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் கட்சியினரும், கிராமமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அ்ங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று கிராம மக்களும், கட்சியினரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் கச்சிராயப்பாளையம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து செம்படாக்குறிச்சி காலனி மற்றும் மாதவச்சேரி கிராமங்களில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Next Story