தர்மபுரியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தர்ணா


தர்மபுரியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 5 Jan 2021 1:38 PM GMT (Updated: 5 Jan 2021 1:38 PM GMT)

தர்மபுரியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு பகுதியில் காமாட்சி அம்மன் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் உள்ள பஜனை மட வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று சாலையில் திரண்டு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ராட்சத ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் அந்தப் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது.

விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்து விட்டன. இதனால் இரவில் வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. கழிவுநீர் கால்வாய்களும் முறையாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். இந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story