பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு


பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு
x
தினத்தந்தி 8 Jan 2021 6:37 AM IST (Updated: 8 Jan 2021 6:37 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அன்னவாசல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு கடந்த 7 மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர்களின் கருத்தை அறிய அந்தந்த பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்களிடம் போதிய ஆதரவு இல்லாததால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இலுப்பூர் கல்வி மாவட்டம் இருந்திரப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி, பாக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி, மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, ராப்பூசல் அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆதரவு

கூட்டத்தில் பெற்றோர் தரப்பில் பேசியவர்களில் பலர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் பள்ளித்துணை ஆய்வாளர் வேலுசாமி மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருவரங்குளம்

இதேேபால, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்று மாணவர்களின் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ராஜாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் முருகையன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 7 மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. ஆகவே, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் வல்லத்திராக்கோட்டை, வெண்ணாவல்குடி உள்ளிட்ட பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Next Story