வாணாபுரம் பகுதியில் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


வாணாபுரம் பகுதியில் மழையால் 5 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2021 6:17 PM IST (Updated: 10 Jan 2021 6:17 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் பகுதியில் பெய்த மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் உளுந்துபயிர் சேதம் அடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் பகுதியில் தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, வெறையூர், அண்டம்பள்ளம், நவம்பட்டு, விருதுவிளங்கினான், கல்லேரி, பவித்திரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்தனர்.

உளுந்து பயிருக்கு மருந்து தெளித்தும், உரமிட்டும் வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையாலும், தற்போது பெய்து வரும் கனமழையாலும் உளுந்து பயிரில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர் அழுகியது. செடிகளில் பூக்கள் உதிர்ந்து, பிஞ்சுகள் வளர்ச்சி அடையாமல் செடிகள் மஞ்சள் நிறத்தில் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பருவ கால பயிராக உளுந்தை பயிரிட்டுள்ளோம். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் உளுந்து பயிரை பயிரிடுவதற்கு உழவு, விதைப்பு, மேலுரம், மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்காக இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும்மேல் செலவு செய்துள்ளோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும், தற்போது மழை பெய்து வருவதாலும் உளுந்து பயிரில் மழைநீர் தேங்கி பயிர் அழுகிப்போகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் உள்ளோம். இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள உளுந்து பயிரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் மழையால் சேதமடைந்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த உளுந்து பயிரை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்கவும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story