நாகர்கோவிலில் 2-வது நாளாக பொங்கல் பரிசு வாங்க குவிந்த தொழிலாளர்கள்


நாகர்கோவிலில் 2-வது நாளாக பொங்கல் பரிசு வாங்க குவிந்த தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2021 3:58 AM GMT (Updated: 11 Jan 2021 3:58 AM GMT)

நாகர்கோவிலில் 2-வது நாளாக பொங்கல் பரிசு வாங்க தொழிலாளர்கள் குவிந்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, பருப்பு, 100 கிராம் நெய், ஏலக்காய், முந்திரி மற்றும் உலர் திராட்சை, ஆண்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்திரம், பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய 2 இடங்களில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் 64 ஆயிரம் தொழிலாளர்களுக்கும், மார்த்தாண்டத்தில் 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் என மொத்தம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

குவிந்தனர்

நாகர்கோவிலை பொறுத்த வரையில் கோணத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகம், கார்மல் பள்ளி ஆகிய 2 இடங்களில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் பொங்கல் பரிசு பெறுவதற்காக ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர்.

அதே போல நேற்றும் ஏராளமான தொழிலாளர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசை உருவானது. தொழிலாளர் நல அலுவலகத்திலேயே 5 சுற்றுகளாக வரிசை நீண்டு இருந்தது. இதன் காரணமாக பொங்கல் பரிசு வழங்கும் பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்தினர்.

Next Story