தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனை + "||" + Workers are suffering because of the inability to sell clay pots in the kiln due to continuous rains
தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனை
தொடர் மழையால் மண்பானைகளை சூளையிலிட்டு விற்க முடியாததால் தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கடந்த 3 மாதங்களாக மண் பானைகள், சட்டிகள் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான மண்பாண்டங்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், அவர்களுக்கு தேவையான அளவு மூலப்பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்து மண்பாண்டங்களை தயார் செய்வார்கள். அவ்வாறு செய்த பானைகளையும், சட்டிகளையும் மழைக்காலம் முடிந்தபின் ஜனவரி மாத தொடக்கத்தில் சூளைகளில் வைத்து சுடுவது வழக்கம்.
தொடர் மழை
ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்பாண்ட தொழிலாளர்களால் தயார் செய்து வைத்துள்ள பானைகளை சூளையிலிட்டு சுட முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆயிரக்கணக்கான பானைகளும், சட்டிகளும் சுடப்படாத நிலையில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொங்கல் பண்டிகைக்கு தயார் செய்து வைத்த பானைகளை சூளையிலிட்டு சுட்டு விற்க முடியாத சூழ்நிலை ஒருபுறம், பொங்கல் விற்பனையை நம்பி பெற்ற கடன்கள் மறுபுறம் என்று கடுமையான மன உளைச்சலுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே கொரோனா தோற்று ஊரடங்கு காரணமாக கடுமையாக தொழில் பாதிப்பை மண்பாண்ட தொழிலாளர்கள் சந்தித்துள்ளனர்.
கோரிக்கை
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வியாபார கனவும் மழையோடு மழையாக கரைந்து போய்விட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் அரசால் வழங்கப்படும் தொழில் முடக்க கால நிவாரண தொகையான ரூ.5 ஆயிரமும் இதுவரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. அனைத்து குடும்பத்தினரும் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்று தெரியாமல் வேதனையோடு உள்ளனர்.
மேலும், மழை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து செய்யும் பானைகளை சுடும் வகையில் சோழமாதேவி கிராமத்தில் தனியாக இடம் ஒதுக்கி அரசு சார்பில் மேற்கூரையோடு கூடிய சூளைகளை கட்டித்தர வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.