திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 12 Jan 2021 2:27 AM GMT (Updated: 12 Jan 2021 2:27 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை இடைவிடாது பெய்து வருகிறது. இந்த மழையினால் பொங்கல் அனைத்து பணிகளும் முடங்கியது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி கொத்து மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் திருவாரூர் கடைவீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆனால் நேற்று காலை தொடங்கிய மழை இடைவிடாது பெய்ததால் மக்கள் வீடுகளிலே முடங்கினர்.

விற்பனை மந்தம்

சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. மக்கள் நடமாட்டம் குறைந்ததால் அனைத்து கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. கரும்பு வரத்து அதிகரித்து வரும் நிலையில் அதனை வாங்க மக்கள் இன்றி விற்பனை மந்ததாக நடைபெற்றது. மழையினால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கன மழையினால் 90 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

விவசாயிகள் கவலை

மழையினால் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்த வயல்களில் மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயல்களில் தண்ணீரில் சாய்ந்துள்ளன. பல இடங்களில் தண்ணீரிலும் மூழ்கியதால் நெல் மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக மழை பெய்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் பொங்கல் பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு கூட செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த மழையால் கூத்தாநல்லூரில் உள்ள பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நன்னிலம்

நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மழை பெய்து வருவதால் பொங்கல் பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றின் வியாபாரம் மந்தமாக உள்ளது. இதனால் கடைத்தெருக்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொங்கல் வியாபாரம் மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் குளம் நிரப்பி உள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பொங்கல் விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

திருமக்கோட்டை

இதேபோல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் சில இடங்களில் பயிர்கள் சாய்ந்துள்ளன. இந்த பயிர்கள் முளைக்க தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மழை காரணமாக பொங்கல் கரும்பு, வாழை தார்கள் வியாபாரம் மந்தமாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலங்கைமான்

வலங்கைமான் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் வலங்கைமான் பேரூராட்சி மணவெளி தெரு அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது அருகே மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் அறுந்து கிடந்த மின்கம்பிகளை மிதிந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. தகவலறிந்த வலங்கைமான் கிராம நிர்வாக அலுவலர் கற்பகவல்லி, வருவாய் ஆய்வாளர் சுகுமாரன், கிராம உதவியாளர் மாயகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மன்னார்குடி, பரவாக்கோட்டை, பைங்காநாடு, உள்ளிக்கோட்டை, மூவாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. மன்னார்குடி கடைத்தெருவில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள பொங்கல் கரும்பு, மஞ்சள் மற்றும் வாழைதார்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள், தரைக்கடை வியாபாரிகள் கவலையில் உள்னர்.. பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர். கடைத்தெருக்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மழையினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோட்டூர்

கோட்டூர் ஒன்றியம் 57 குல மாணிக்கம் ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தில் 30 விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் 22 கூரை வீடுகள் சேதமடைந்தன. இதில் சில வீடுகளின் முகப்பு கொட்டகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள குளத்தில் விழுந்தன. மேலும் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட் காற்றில் பறந்தன. சூறாவளி காற்றுக்கு அங்கிருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அஙகுள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். இதேபோல் மாவட்டக்குடி ஊராட்சி பாலாகுறிச்சி கிராமத்தில் சூறாவளி காற்றால் மரங்கள் சாய்ந்தன. தகவல் அறிந்த கோட்டூர் ஆணையர் சாந்தி , ஒன்றிய பொறியாளர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுசீலா ஜெயராமன், ஊராட்சி தலைவர் ஜெயலலிதா ஜெயபால், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா சேட் மற்றும் பலர் சம்பவ இடங்களை பார்வையிட்டு தேவையான உதவிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மழை அளவு

நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குடவாசல்-58, முத்துப்பேட்டை-41, பாண்டவையாறு தலைப்பு-29, திருத்துறைப்பூண்டி-29, நன்னிலம்-27, வலங்கைமான்-24, நீடாமங்கலம்-23, மன்னார்குடி-22, திருவாரூர்-16. இதில் அதிகப்பட்சமாக குடவாசலில் 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Next Story