நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்


நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Jan 2021 3:43 AM GMT (Updated: 12 Jan 2021 3:43 AM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை ஜெயந்தி விழா நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு வழங்க லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகமும், 10 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு உச்ச கால தீபாராதனையும், மாலை 6 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகமும் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால். மற்றும் தயிர், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சைச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடக்கிறது. அதை தொடர்ந்து 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

பக்தர்களுக்கு லட்டு

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டுவடை, குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லட்டு தயாரிப்பதற்காக 1½ டன் கடலைமாவும், 5 டன் சீனி, 150 டின் எண்ணெய். 80 கிலோ முந்திரி பருப்பு. 80 கிலோ நெய். 50 கிலோ ஏலக்காய். 50 கிலோ கிராம்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது லட்டு தயாரிக்கும் பணியில் பார்வதி புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அய்யர் தலைமையில் 75 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இந்த பணிகள் இன்றுடன் முடிவடைகிறது.

கொரோனா பரிசோதனை

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடந்தது. இது குமரி சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்களும் பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

Next Story