மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையிலும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் + "||" + Pathayathri devotees gathered at the Subramania Swamy Temple in the pouring rain; Sami darshan waiting in long queue

கொட்டும் மழையிலும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

கொட்டும் மழையிலும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று கொட்டும் மழையிலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாதயாத்திரை பக்தர்கள்
முருகபெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும் முருகனின் பக்தி பாடல்கள் பாடியும், ஆடியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

கொட்டும் மழையில்...
கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மற்றும் திருச்செந்தூர் மார்க்கத்திலுள்ள ஊர்களில் விட்டு விட்டு மழை பெய்தது. திருச்செந்தூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பகல் வரை தொடர்ந்து சற்று பலத்த மழை பெய்தது. இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த கொட்டும் மழையிலும் நெல்லை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மினி வேன்கள், ஆட்டோக்கள், மினி லாரிகளில் அலங்கரிக்கப்பட்ட முருகன் போட்டோக்களுடன், சப்பரம் அமைத்து ஒலிபெருக்கியில் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறு பாதயாத்திரை சென்றனர். கொட்டிய மழையிலும் பக்தர்கள் சாரை சாரையாக பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

எல்கையில் வழிபாடு
திருச்செந்தூர் நகர எல்கையான குரும்பூர் வளைவு பகுதியில் பக்தர்கள் சாலையில் சூடம் ஏற்ற வழிபாடு நடத்தி விட்டு கோவிலை நோக்கி பாதயாத்திரையாக வந்தனர். திருச்செந்தூர் நகருக்குள்ளும் மழையில் நனைந்தவாறு பாதயாத்திரை பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.