கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது; ஈரோட்டில் நல்லசாமி பேட்டி + "||" + The concrete floor should not be laid in the subway drain; Erode Nallasamy interview in Erode
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது; ஈரோட்டில் நல்லசாமி பேட்டி
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறினார்.
கூட்டம்
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாச்சலம், செங்கோட்டையன், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அதைத்தொடர்ந்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகவும், மண்ணால் கட்டப்பட்ட அணையாகவும் பவானிசாகர் அணை உள்ளது. இதேபோல வாய்க்கால் மண்ணால் வெட்டப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது ஆகும். ஆனால் தற்போது கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்துள்ளதால் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
போராட்டம்
இந்த திட்டத்தை செயல்படுத்த முறையாக விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. பாசன சபை தலைவர்களை மட்டும் அழைத்து கருத்து கேட்டுவிட்டு திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது ஏற்புடையது அல்ல. கீழ்பவானி பாசனம் பெறும் பயனாளிகளில் 95 சதவீதம் பேர் இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந்தேதி சென்னிமலையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.