ஒடுகத்தூரில், மருத்துவ சிகிச்சை மையத்துக்கு ‘சீல்’ - போலி டாக்டருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + 'Seal' for medical treatment center in Odugathur - Police webcast for fake doctor
ஒடுகத்தூரில், மருத்துவ சிகிச்சை மையத்துக்கு ‘சீல்’ - போலி டாக்டருக்கு போலீஸ் வலைவீச்சு
ஒடுகத்தூரில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் நடத்தி வந்த மருத்துவ சிகிக்சை மையத்தைப் பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர், அதே பகுதியில் ரமேஷ் கிளினிக் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை மையம் நடத்தி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
ரமேஷ் பிளஸ்-2 படித்து விட்டு பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டருக்கு பலர் புகார் மனு அனுப்பினர்.
கலெக்டர் உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் டாக்டர் சந்தோஷ்குமார், ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து மருத்துவச் சிகிச்சை மையத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு ரமேஷ் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து அணைக்கட்டு தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் சரவணமுத்து, ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், போலீசார் விரைந்து வந்து, ரமேஷ் நடத்தி வந்த மருத்துவச் சிகிச்சை மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
போலி டாக்டர் ரமேஷ் அதிகாரிகள், போலீசார் வருவதை அறிந்ததும் தப்பியோடி விட்டார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.