ஈரோடு கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஈரோடு கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Jan 2021 6:02 AM GMT (Updated: 13 Jan 2021 6:02 AM GMT)

ஈரோடு கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு, 

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவரான ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து செந்தூரம், மலர்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் மூலவருக்கு வடைமாலை சாற்றப்பட்டது. மாலையில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு லட்டு, ஆரஞ்சு நிற கயிறு போன்ற பிரசாதம் வழங்கவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பொது தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் வழியாக பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நடந்து சென்றார்கள். விநாயகர், ஆஞ்சநேயரை பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு நேராக வெளியே செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்ததால் கூட்ட நெரிசல் காணப்படவில்லை.

பெரியவலசு

இதேபோல் கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி செந்தூர அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும், பெரியவலசு வலம்புரி ராஜகணபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story