பெண்களை இழிவுபடுத்தினால் தி.மு.க.விற்கு பதிலடி கொடுப்போம் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


பெண்களை இழிவுபடுத்தினால் தி.மு.க.விற்கு பதிலடி கொடுப்போம் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 13 Jan 2021 3:18 PM GMT (Updated: 13 Jan 2021 3:18 PM GMT)

பெண்களை இழிவுபடுத்தினால் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்போம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை,

பெண்களை இழிவாக பேசியதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டம் ஒத்தக்கடையில் நேற்று நடந்தது. பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் செயல்படுத்தி வருகின்றனர். எனவே ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் அ.தி.மு.க. அரசு மீது மரியாதை வைத்துள்ளனர். இதனை பொறுக்க முடியாத மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஆகியோர் தற்போது பெண்கள் மீது தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இது இன்றல்ல, நேற்றல்ல, தொடர்ந்து பெண்களை வசைபாடுவது தி.மு.க.வின் பண்பாடாகும். அது கருணாநிதி காலம் தொட்டு இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாது தி.மு.க. நடத்திய கிராம சபை கூட்டத்தில் கூட கேள்வி கேட்ட பெண்ணை ஸ்டாலின் இழிவாக பேசியதை நாம் அனைவரும் அறிவோம்.

எனவே தான் பெண்களை காயப்படுத்திய தி.மு.க.வை கண்டித்து மதுரையில் முதல் ஆர்ப்பாட்டம், இந்த முதல் மாதத்தில் நடக்கிறது. உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வருவதாக கூறுகின்றனர். அப்போது மீண்டும் இதுபோன்று பெண்களை இழிவுபடுத்தினால் பெண்களுக்கு ஆதரவாக சரியான பதிலடியை திமுகவிற்கு தருவோம். காற்றில் கூட ஊழல் செய்த ராஜா முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதுமட்டுமல்லாது தி.மு/க. முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது சொத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. மு.க.ஸ்டாலின் மீது கூட வழக்கு உள்ளது. அவர் வரும் தேர்தலில் நிற்க வாய்ப்பு உள்ளதா என்று கூட தெரியவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ராஜ்சத்யன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story