நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Jan 2021 4:40 PM GMT (Updated: 13 Jan 2021 4:40 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது.இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில் நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனாலும் அணைக்கு நீர் வரத்து தொடர்ச்சியாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 89 அடியிலேயே (மொத்த கொள்ளளவு 90 அடி) தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 1 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 5 மணியளவில் அணையில் உள்ள 9 மதகுகளில் 4 மதகுகள் வழியாக உபரிநீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உள்ள அனைத்து ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் திறப்பதற்கான முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையில் 89.24 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3821 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3800 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

Next Story