நெல்லை, தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாமிரபரணியில் சீறிப்பாயும் தண்ணீர் - வீடுகளில் வெள்ளம் புகுந்தது + "||" + Heavy rains in Nellai and Tenkasi: Water gushing in Tamiraparani
Homes were flooded
நெல்லை, தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை: தாமிரபரணியில் சீறிப்பாயும் தண்ணீர் - வீடுகளில் வெள்ளம் புகுந்தது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி அணை ஆகியவற்றில் இருந்து வினாடிக்கு 52 ஆயிரம் கனஅடி வீதம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மாலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25,820 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணையில் இருந்து 28,798 கனஅடி வீதமும், கடனாநதி அணையில் இருந்து 3,379 கனஅடி வீதமும் தண்ணீர் கூடுதலாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதாவது, தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து செல்கிறது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள பாலத்தை மூழ்கி தண்ணீர் சென்றதால் பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு மேல் உள்ள கல்யாண தீர்த்தத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாபநாசம் யானை பாலத்தை மூழ்கடித்தபடியும் தண்ணீர் செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மூழ்கி கோபுரம் மட்டும் வெளியே தெரியும் அளவிற்கும், மேலநத்தம் பாலத்தை மூழ்கடித்தப்படியும் வெள்ளம் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெரு, சந்திப்பு சிந்துபூந்துறை, அண்ணாநகர், மீனாட்சிபுரம், கைலாசபுரம், வேடுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மேலும் சிலர் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றினார்கள். நெல்லை அருகன்குளம், சேந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது.
அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.
இதற்கிடையே, நெல்லை அருகே உள்ள சேரன்மாதேவி, சங்கன்திரடு ஆகிய ஊர்களை இணைக்கும் ஆற்றுப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் சங்கன்திரடு கிராமத்தை மழைநீர் சூழ்ந்தது. அங்குள்ள 400 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் தாங்களாகவே வெளியேறினார்கள்.
மேலும் அங்குள்ள முதியோர்கள், கால்நடைகளை மீட்கமுடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று முதியோர்களை தூக்கி வந்தனர். மேலும் அங்குள்ள கால்நடைகளை தோள்களில் தூக்கி வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இதற்கிடையே, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், குருந்துடையார்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12 முகாம்களில் 227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேர் மணிமுத்தாறு பகுதிகளிலும், நெல்லை மாநகர் பகுதியில் 25 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். முக்கூடல் அருகே திருப்புடைமருதூர், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதியில் சேதமடைந்த பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.