பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு


பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 1:45 AM GMT (Updated: 14 Jan 2021 1:45 AM GMT)

பண்டாரா ஆஸ்பத்திரி தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.

பண்டாரா, 

நாக்பூரை அடுத்த பண்டாராவில் அந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறப்பு சிகிச்சை வார்டில் கடந்த 9-ந் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பச்சிளம் குழந்தைகளில் 10 குழந்தைகளை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதில் 3 குழந்தைகள் கருகியும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்தன.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று பண்டாரா மாவட்டத்தில் விபத்து நடந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார், அங்கு தீ விபத்துக்குள்ளான வார்டை பார்வையிட்டார்.

மேலும் பச்சிளம் குழந்தைகளை இழந்து தவித்துவரும் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளின் உயிரை பறித்த இந்த தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் தீவிபத்தில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சட்டமன்ற சபாநாயகர் நானா படோலே, பண்டாரா எம்.பி. சுனில் மேன்தே மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.

Next Story