கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை: போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வடமாநில சுற்றுலா பயணிகள் 3 மணிநேரம் தீவிர விசாரணை


கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை: போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய வடமாநில சுற்றுலா பயணிகள் 3 மணிநேரம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 14 Jan 2021 3:14 AM GMT (Updated: 14 Jan 2021 3:14 AM GMT)

கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகையின் போது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய சுற்றுலா பயணிகள் 3 மணிநேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

நாகர்கோவில், 

கன்னியாகுமரி கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுவார்கள். அதன்படி நேற்றுமுன்தினம் குமரி கடல் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைைமயில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, நம்பியார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது, நள்ளிரவு அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிலிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த நபர்கள் இந்தியில் பேசினர்.

இதனால், காரில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் போன்று மாறுவேடத்தில் வந்த போலீசாராக இருக்கலாம் என்று கருதினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து 3 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் தீவிரவாதிகள் வேடத்தில் வந்த போலீசார் இல்லை என்பதும், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story