வீட்டை அடமானம் வைத்து அதிருப்தி கர்நாடக எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தவர், சி.பி.ேயாகேஷ்வர்; மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி


மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
x
மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
தினத்தந்தி 15 Jan 2021 9:00 PM GMT (Updated: 15 Jan 2021 6:18 PM GMT)

புதிய மந்திரி சி.பி.யோகேஷ்வர் தனது வீட்டை அடமானம் வைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தவர் என்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தனிப்பட்ட வாழ்க்கை
சிலர் சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றதாக குற்றம்சாட்டி உள்ளனர். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் வாழ்க்கையில் சி.டி.க்கள் வரும் போகும். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை விஷயங்களை கிளறக்கூடாது. சி.பி.யோகேஷ்வர், கஷ்டப்பட்டு, தனது உடலை வருத்திக் கொண்டு எங்களை அதாவது காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்தார். அவருக்கு இது தேவையாக இருந்ததா?.

அவர் தனது வீட்டை எம்.டி.பி.நாகராஜிடம் அடமானம் வைத்து கடன் பெற்று செலவு செய்தார். பா.ஜனதா ஒரு பெரிய கட்சி. அதனால் கட்சியில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம் தான். இந்த கருத்து வேறுபாடுகளை எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள் சரிசெய்வார்கள்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

கடன் பெறவில்லை
தன்னிடம் கடன் பெற்றதாக கூறிய ரமேஷ் ஜார்கிகோளியின் கருத்தை எம்.டி.பி.நாகராஜ் நிராகரித்துள்ளார். சி.பி.யோகேஷ்வர் தன்னிடம் கடன் பெறவில்லை என்றும், ரமேஷ் ஜார்கிகோளி ஏன் அவ்வாறு கூறினார் என்றும் தெரியவில்லை எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.

சி.பி.யோகேஷ்வருக்கு மந்திரி பதவி வழங்கியதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story