மழையால் சேதமான பயிர்களை கலெக்டர் நேரில் ஆய்வு - நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி


மழையால் சேதமான பயிர்களை கலெக்டர் நேரில் ஆய்வு - நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
x
தினத்தந்தி 16 Jan 2021 2:19 PM GMT (Updated: 16 Jan 2021 2:19 PM GMT)

மழையால் சேதமான பயிர்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 32.3 மி.மீ மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு 13.1.2021 வரை மட்டும் 117.45 மி.மீ மழை கிடைத்துள்ளது.மேலும் மாவட்டம் முழுவதும் இம்மழை பரவலாக பெய்துள்ளது.மேலும் ஆண்டு சராசரி மழை அளவு 904.6 மி.மீ.உள்ள நிலையில் சென்ற ஆண்டு (2020) 1131.68 மி.மி.மழை பெய்து கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழை அறுவடை நிலையில் இருக்கும் நெல் பயிரினை பெரிதும் பாதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியை நேரில் சந்தித்து மழையினால் நெல் பயிர் சேதம் அடைந்தது குறித்து தகவல் தெரிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் காளையார்கோவில் வட்டாரத்தில் அல்லூர் பனங்காடி, விட்டனேறி, மரவமங்கலம், சாக்கூர் காஞ்சிரம் பகுதிகளில் நேரில் சென்று கண்மாய் பகுதிகளில் வயல்களில் நீர் தேங்கியுள்ள நிலையில் நெற்கதிர்கள் சாய்ந்து மணிகள் பயிரிலேயே முளைத்து நாற்றாக வளர்ந்து வந்துள்ளதை பார்வையிட்டார்.

பின்னர் பாதிக்கபட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து விடுதல் இன்றி கணக்கு எடுக்க உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதிஅளித்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குனர் பன்னீர் செல்வம், உதவி இயக்குனர் செந்தில்நாதன், தாசில்தார் ஜெய நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story