வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்


வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 16 Jan 2021 10:16 PM GMT (Updated: 16 Jan 2021 10:16 PM GMT)

தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, வைகை அணையில் இருந்து மதகுகள் வழியாக 58-ம் கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார். இதில், ரவீந்திரநாத் எம்.பி., மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி வீதம் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் தண்ணீர் உசிலம்பட்டியை சென்றடைந்ததும், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் உசிலம்பட்டி வட்டாரத்தில் 1,912 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டாரத்தில் 273 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 195 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story