நத்தமேட்டுப்பாளையத்தில் இருந்து கோம்புப்பாளையம் வரை சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நத்தமேட்டுப்பாளையத்தில் இருந்து கோம்புப்பாளையம் வரை சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Jan 2021 12:49 AM GMT (Updated: 17 Jan 2021 12:49 AM GMT)

நத்தமேட்டுப்பாளையத்தில் இருந்து கோம்புப்பாளையம் வரை சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நொய்யல், 

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையத்தில் இருந்து குறுக்கு வழியில் பரமத்தி வேலூர், தவுட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக கோம்புப்பாளையத்தில் இருந்து தவுட்டுப்பாளையம் வரை உள்ள புகழூர் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள சாலை வழியாக செல்வது வழக்கம். அதேபோல் கோம்புப்பாளையத்திலிருந்து நத்தமேட்டுப் பாளையத்திற்கு புகளூர் வாய்க்கால் ஓரத்தில் போட்டுள்ள மண்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புகளூர் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்ட மண் சாலை நெடுகிலும் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இந்த வழியாக நடந்தும், இருசக்கர வாகனத்திலும் செல்ல முடியாத நிலை உள்ளது.

கோரிக்கை

நடந்து சென்றாலும் வழுக்கி கீழே விழும் நிலையிலும், இருசக்கர வாகனத்தில் சென்றாலும் வழுக்கி கீழே விழும் நிலையில் உள்ளது. பலர் அவ்வாறு சேற்றில் விழுந்தும் செல்கின்றனர். நத்தமேட்டுப்பாளையத்திலிருந்து தவுட்டுப்பாளையம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது.

அதேபோல் நத்தமேட்டுப்பாளையத்தில் இருந்து கோம்புப்பாளையம் வரை புகளூர் வாய்க்காலின் ஓரத்தில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி பொதுமக்கள் இடையூறு இன்றி இந்த வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோம்புப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story