மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்


மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 17 Jan 2021 3:25 AM GMT (Updated: 2021-01-17T08:55:32+05:30)

போலீஸ் என கூறி மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற தென்காசி மாவட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மலையப்பெருமாள்(வயது60). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பாலாஜி(25) அதே மளிகை கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த 8-ந் தேதி டிப்டாப் உடை அணிந்த 3 பேர், மலையப்பெருமாள் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் மலையப்பெருமாளிடம் நாங்கள் போலீஸ் எனவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி வீட்டிற்குள் சென்றனர்.

பின்னர் அவர்கள், சாலை விபத்தை உங்களது கார் ஏற்படுத்தியது எனவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உங்கள் காரின் நம்பர் பதிவாகி இருப்பதாகவும் மலையப்பெருமாளிடம் தெரிவித்தனர். ஆனால் அப்படி எந்த விபத்திலும் கார் சிக்கவில்லை என அவர் கூறியதை தொடர்ந்து வழக்கை முடித்து வைக்க ரூ.40 லட்சம் தர வேண்டும் என கூறினர். ஆனால் அவர்கள் தங்களால் பணம் கொடுக்க முடியாது என கூறினர்.

கொள்ளை

இதனால் மலையப்பெருமாள், அவரது மனைவி சாந்தி, மகள் நிவேதா, மகன் பாலாஜி ஆகியோரை மாடிக்கு அழைத்து சென்ற மர்மநபர்கள் அவர்களை கயிற்றால் கட்டிபோட்டு அடித்தனர். மேலும் துப்பாக்கியை காண்பித்து மிரட்டவும் செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். 20 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை போனதாக தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், ஏட்டுகள் மனோகரன், கோதண்டபாணி, சிங்காரவேலு, புகழேந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

தனிப்படையினர், கொள்ளைபோன வீடு மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவமும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் எண்ணும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இந்த உருவம் மற்றும் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், நகையை கொள்ளையடித்தவர்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆலங்குளம் தாலுகா கழுநீர்குளம் ராமசாமிகோவில் தெருவை சேர்ந்த சுப்பையா பாண்டியன் மகன் வைத்தீஸ்வரன்(26) மற்றும் அவர்களது 2 நண்பர்கள் இணைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வைத்தீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர், தான் பட்டப்படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்து வந்ததாகவும், ராணுவத்தில் சேர தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்தபோது சில பிரச்சினை காரணமாக 20 நாட்களில் வேலையை விட்டு அனுப்பிவிட்டதாகவும் மீண்டும் சேர முயற்சி செய்யும் நேரத்தில் கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார். மேலும் இவர் வைத்திருந்த துப்பாக்கி, பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story