எம்.ஜி.ஆர்.பிறந்தநாள், பொங்கல் விழா: கோவையில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் முதல் பரிசாக காரை அமைச்சர் வழங்கினார்


எம்.ஜி.ஆர்.பிறந்தநாள், பொங்கல் விழா: கோவையில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் முதல் பரிசாக காரை அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Jan 2021 1:17 AM GMT (Updated: 18 Jan 2021 1:17 AM GMT)

கோவையில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள், பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ரேக்ளா பந்தயம் களைகட்டியது. வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக காரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை, 

பொங்கல் பண்டிகை மற்றும் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் கோவை கொடிசியாவில் ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் தலைமை தாங்கினார். போட்டிகளை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்க பொள்ளாச்சி, தாராபுரம், கோவை, காங்கேயம், ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 510 ஜோடி காளைகள் கலந்து கொண்டன.

போட்டிகள் 200 மீட்டர் தூரம் மற்றும் 300 மீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் 200 மீட்டர் தூர போட்டியில் 2 வயது வரையுள்ள காளைகள் (2 பல் மற்றும் 4 பல்) பங்கேற்றன. 300 மீட்டர் தூர போட்டியில் 2½ வயதிற்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போட்டி நடைபெற்ற இடத்தின் இருபகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

சீறி பாய்ந்த காளைகள்

களைகட்டிய ரேக்ளா பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் கொடிசியாவில் குவிந்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் சீறிபாய்ந்தன. இதனை தடுப்புகளின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ரேக்ளா போட்டியில் முதல் 20 இடங்களை பிடித்தவர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் முதல் 1 கிராம் தங்க நாணயம் வரையும், 100 கிராம் வெள்ளி முதல் 10 கிராம் வெள்ளி நாணயம் வரையும் பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர 200 மீட்டர் தூர பந்தயத்தில் முதலிடம் பிடிக்கும் காளைகளுக்கு காரும், 300 மீட்டர் தூரத்தில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு புல்லட்டும் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி 200 மீட்டர் தூரத்தில் சரவணம்பட்டியை சேர்ந்த சிராவி தம்பி என்பவரின் காளைகள் முதலிடம் பிடித்தன.

முதல் பரிசு கார்

மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கார், புல்லட், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி.அன்பரசன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, தமிழ்நாடு ரேக்ளா கிளப் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், கழக அமைப்பு செயலாளர் செல்வராஜ், ஹஜ்கமிட்டி தலைவர் சி.டி.சி. தலைவர் ஜப்பார், சிந்தாமணி கூட்டுறவு தலைவர் சிங்கை முத்து, பிந்து பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இடையே ஆட்டு சண்டை சிறிது நேரம் நடத்தப்பட்டது.

முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரேக்ளா வண்டியில் பரிசு வழங்கும் விழா மேடைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story