தேனியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டை போல நடந்த பன்றி பிடிக்கும் வினோத போட்டி


தேனியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டை போல நடந்த பன்றி பிடிக்கும் வினோத போட்டி
x
தினத்தந்தி 18 Jan 2021 3:27 AM GMT (Updated: 18 Jan 2021 3:27 AM GMT)

தேனியில் ஜல்லிக்கட்டு போன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பன்றி பிடிக்கும் வினோத போட்டி நடந்தது.

தேனி, 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா போன்ற வீரவிளையாட்டுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் ஜல்லிக்கட்டு போன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பன்றி பிடித்தல் என்ற வினோத போட்டி நடந்தது.

வன வேங்கைகள் கட்சி சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. தேனியில் முதல் முறையாக நடந்த இந்த போட்டிக்காக ஜல்லிக்கட்டு போல வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் போட்டி களத்தை சுற்றிலும் கம்புகளால் வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பன்றி பிடிக்கும் போட்டி தொடங்கியது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பன்றிகளை அழைத்து வந்திருந்தனர்.

வீறுகொண்டு ஓடிய பன்றிகள்

போட்டியில் அவிழ்த்துவிடப்படும் பன்றிகளின் பின்னங்கால்களை பிடித்து, அதை நிறுத்தினால் போட்டியாளர் வெற்றி பெறுவார் என்று விதிமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியாளர்கள், வாடிவாசல் வழியாக வீறுகொண்டு ஓடிய பன்றிகளின் கால்களை பிடிக்க முயற்சித்தனர்.

நேர்த்தியாக கால்களைப் பிடித்து பன்றிகளை நிறுத்தியவர்களுக்கு முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வினோத போட்டியை தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

11 பன்றிகள் பங்கேற்பு

இந்த போட்டி குறித்து வனவேங்கைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் உலகநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சங்க கால குறிஞ்சி நிலத்தில் விவசாய உழவிற்கு பன்றிகளும் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஆதாரம் புறநானூற்றில் பாடான் திணையில் உள்ளது. இதனை மையமாக வைத்து தான் பன்றி தழுவும் போட்டியை நடத்த திட்டமிட்டோம். ஜல்லிக்கட்டுப் போட்டி போன்று இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. சுமார் 70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஆரம்பக்கோட்டில் இருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றிகள் 3 அடி தொலைவில் போடப்பட்டுள்ள கோட்டைக் கடந்த பின்னர், அங்கிருக்கும் 3 பேர், பன்றியை பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். அதாவது பன்றி எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடிக்க வேண்டும். இது சவாலாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 11 பன்றிகள் களம் இறக்கப்பட்டன. சங்க கால குறிஞ்சி நில மக்களின் நினைவாக, இந்த போட்டி நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story