கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து; பக்தர்களுக்கும் தடை


மருதமலை முருகன் கோவில்
x
மருதமலை முருகன் கோவில்
தினத்தந்தி 18 Jan 2021 11:10 PM GMT (Updated: 18 Jan 2021 11:10 PM GMT)

கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

மருதமலை முருகன் கோவில்
கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 21-ஆம் தேதி இரவு வாஸ்து பூஜை நடைபெறுகிறது. மறுநாள் காலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

திருக்கல்யாணம் நிகழ்ச்சி
தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகளும், 28-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருகின்றார்.

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இது குறித்து கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா கூறியதாவது:-

தைப்பூச தேரோட்டம் தடை
ஆண்டுதோறும் மருதமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் முருகன் கோவில்களில் தைப்பூச தேரோட்டம் நடத்த தடை விதித்து உள்ளது. எனவே மருதமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி நடக்க இருந்த தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் சுப்ரமணிய சுவாமி- வள்ளி,தெய்வானை திருக் கல்யாணம் நடைபெறுகிறது. அதுபோன்று பெரிய தேரோட்டம் நடப்பதற்கு பதிலாக சிறிய தேரில் சுப்ரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் பக்தர்கள் காலை 8 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தங்குவதற்கு அனுமதி இல்லை
அதுபோன்று பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் தங்குவதற்கு அனுமதி இல்லை. தைப்பூசத்தன்று காலை 8 மணி அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் பால்குடம், பால்காவடி எடுத்து வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story