திருவையாறில் தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது


திருவையாறில் தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 Jan 2021 5:03 AM GMT (Updated: 19 Jan 2021 5:03 AM GMT)

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூர், 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான பிப்ரவரி 2-ந் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தஞ்சையை அடுத்த திருவையாறில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் நடைபெறும் விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 2 நாட்கள் மட்டுமே எளிமையான முறையில் தியாகராஜர் ஆராதனை விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா அடுத்த மாதம்(பிப்ரவரி) 1-ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்

தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். விழா தொடங்கியவுடன் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள்(2-ந் தேதி) காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது. 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசையும், அதைத்தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை தியாகராஜர் சிலைக்கு அபிஷேகமும், இசை கலைஞர்களின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளும் நடக்கிறது.

பின்னர் 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் சிலை ஊர்வலமும், அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவமும் நடக்கிறது.

200 பேர் மட்டுமே அனுமதி

இந்த ஆண்டு சங்கீத வித்வான்கள், இசை கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைப்பிடித்து 200 பேர் மட்டுமே பந்தலில் அமர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.விழாவில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தியாக பிரம்ம மகோத்சவ சபையினர் வலியுறுத்தியுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தியாக பிரம்ம மகோத்சவ சபையினர் செய்து வருகின்றனர்.

பந்தக்கால் முகூர்த்தம்

தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி திருவையாறில் நேற்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் தியாக பிரம்ம மகோத்சவ சபை அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரே‌‌ஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, பொருளாளர் கணே‌‌ஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story