நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்; நாளை மறுநாள் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி


நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
x
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
தினத்தந்தி 20 Jan 2021 5:01 AM IST (Updated: 20 Jan 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொடியேற்றம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 7 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’’ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

தீர்த்தவாரி

28-ந் தேதி தைப்பூசம் தினத்தன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் புகழ் பெற்ற கைலாசபுரத்தில் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் பகல் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபத்தில் இறங்குகின்றனர். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைகின்றனர்.

தெப்பத்திருவிழா

29-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சியருளும், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.


Next Story