கடலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தொழில் துறை பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எம்.சி.சம்பத் சவால்


கடலூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: தொழில் துறை பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எம்.சி.சம்பத் சவால்
x
தினத்தந்தி 21 Jan 2021 6:02 AM IST (Updated: 21 Jan 2021 6:02 AM IST)
t-max-icont-min-icon

தொழில் துறை பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று கடலூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் சவால் விடுத்தார்.

கடலூர்,

கடலூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், சார்பு அணி செயலாளர்கள் கே.ஆர்.பாலகிருஷ்ணன், காசிநாதன், காமராஜ், வெங்கட்ராமன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன், செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

சாதனை

அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. இந்த ஆட்சி நீடிக்காது என்றார்கள். ஆனால் தற்போது 5-ம் ஆண்டு தொடக்க விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்த ஆட்சியில் எந்த குறைகளையும் சொல்ல முடியாது. அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறோம்.

ஆனால் தொழில்துறை பற்றி மு.க.ஸ்டாலின் குறை சொல்லி வருகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது. தொழில் நிறுவனங்கள் எத்தனை வந்தது என்று கேட்கிறார். அவர் தொழில் துறை பற்றி என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?. 2019-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீட்டில் 10.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

மணி மகுடம்

இவற்றில் ரூ.24 ஆயிரத்து 492 கோடி முதலீட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 844 பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள், அதாவது 27 சதவீத திட்டங்கள், ஒரே ஆண்டில் தனது வணிக உற்பத்தியை தொடங்கி சாதனை படைத்துள்ளன.

கொரோனா காலத்திலும் அதிக அளவு முதலீட்டை ஈர்த்துள்ளோம். மராட்டிய மாநிலத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளோம். செல்போன் நிறுவனத்தின் பெகட்ரான்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் உலக அளவில் செல்போன் ஏற்றுமதியில் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற உள்ளது. தொழில் துறை இந்த அரசின் மணி மகுடமாக உள்ளது. இது எல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா?

வேலைவாய்ப்பு

ஒற்றை சாளர முறையிலும் தொழில் தொடங்க இந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டுடன் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் தொழில் தொடங்க உள்ளது.

மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி, மக்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். அவர் ராசியில்லாத ராஜா. வருகிற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தந்து கூட கிடைக்காது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், நகர துணை செயலாளர் கந்தன், சார்பு அணி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஏ.ஜி.தஷ்ணா, என்ஜினீயர் சுரேஷ், சங்கர், துணை செயலாளர் ஜே.கண்ணன், நகர அவை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story