பசுமை பட்டாசு தயாரிப்பு உரிமம் பெற வழிமுறைகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்


பசுமை பட்டாசு தயாரிப்பு உரிமம் பெற வழிமுறைகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 22 Jan 2021 1:52 PM GMT (Updated: 22 Jan 2021 1:52 PM GMT)

பட்டாசு தொழிற்சாலைகள் பசுமை பட்டாசு தயாரிப்பிற்கு உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் நீரி அமைப்பு புதிய வகையில் ஒலி மாசு, வேதிப்பொருட்களால் காற்று மாசு குறையும் வகையில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

இதற்கான அனுமதியை நீரி அமைப்பிடம்பெற வேண்டும். விண்ணப்பிக்கும் முறை நாக்பூரில் அமைந்துள்ள நீரி அமைப்புக்கு நேரடியாகவோ தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் 2 பிரதிகளில் சுய சான்றொப்பம் இட்ட ஆதார் அட்டை நகல், தொழிற்சாலைகளின் உரிமம் நகல், கையொப்பம் இட்ட மற்றும் தேதி குறிப்பிடாத ரூபாய் 100 பத்திரத்தில் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை அனுப்பி வைக்கப்படவேண்டும்.

மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் ரூ.10 ஆயிரம், 18 சதவீத சரக்கு சேவை வரி, ஒளி மற்றும் ஒலி விளைவுக்கு தனித் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். மண்டல வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் உரிமம் பெற ரூ. 20 ஆயிரம் மற்றும் 18 சதவீத சரக்கு சேவை வரி, தலைமையிட வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் உரிமம் பெற ரூ. 30 ஆயிரம் சரக்குசேவைவரியுடன் செலுத்த வேண்டும். கட்டணத்திற்கான வரைவோலை நீரி அமைப்பின் இயக்குனர் பெயரில் எடுக்கவேண்டும். ரூ.100 பத்திரத்தில் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் நீரி அமைப்பும் செயல்படுத்த வேண்டும்.

விண்ணப்பித்த 15 நாட்களில் பதிவு எண் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நீரி அமைப்பால் வழங்கப்பட்ட பதிவினை உடைய பட்டாசு தொழிற்சாலைகள் அறிவுறுத்திய கூட்டுப்பொருள் மூலம் பட்டாசுகள் தயாரித்து அதனை மாதிரி ஆய்வு கட்டணத்துடன் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு நீரி அமைப்புக்குஅனுப்பி வைக்க வேண்டும். ஆய்வுக் கட்டணமாக 18 சதவீத சரக்கு சேவை வரி உடன் ரூ. 7 ஆயிரம் வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.

நீரி அமைப்பிற்கு அனுப்பப்பட்ட பட்டாசு மாதிரிகளை ஆய்வு செய்து சரியான விகிதத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு இருந்தால் இந்த பட்டாசு தொழிற்சாலைக்கு பசுமை பட்டாசு தயாரிக்க அனுமதி மற்றும் ஒவ்வொரு வகை பட்டாசுக்கும் தனித்தனியே கியூ ஆர் கோடு நீரி அமைப்பால் வழங்கப்படும். வழங்கப்பட்ட கியூ ஆர் கோடு மற்றும் பதிவு சான்றிதழ்எண்ணைஅந்த தொழிற்சாலைகள் தயாரித்த பட்டாசு பெட்டிகளில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு பசுமை பட்டாசுகள் என்று நீரி அமைப்பு அங்கீகாரம் வழங்குகிறது. மேற்கண்ட விண்ணப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக பதிவு பெற வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியம், சப்-கலெக்டர்தினேஷ்குமார், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், காசிசெல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, தனி தாசில்தார் லோகநாதன், அரசு அலுவலர்கள் உள்பட பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story