அம்பேத்கர் படத்துடன் பலகை வைக்கும் விவகாரம் கிராம மக்கள் எதிா்ப்பு தொிவித்து சாலை மறியல் விக்கிரவாண்டி அருகே பரபரப்பு


அம்பேத்கர் படத்துடன் பலகை வைக்கும் விவகாரம் கிராம மக்கள் எதிா்ப்பு தொிவித்து சாலை மறியல் விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 11:07 PM IST (Updated: 24 Jan 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் படத்துடன் கூடிய பலகை வைக்கும் விவகாரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது ராதாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒரு கடையின் முன்பு இருந்த அம்பேத்கர் படம் வைத்திருந்த சங்க பலகை கோர்ட்டு உத்தரவு படி அகற்றப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ராதாபுரம் காலனி மக்கள்  நேற்று முன்தினம் ஒன்று திரண்டு அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அந்த பகுதியில் மாற்று இடத்தில் பலகையை வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ராதாபுரம் கிராம பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தின் முன்பு ஒன்று திரண்டு, அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கங்கையம்மன் கோவில் அருகேயும், எதிர் பகுதியிலும் அம்பேத்கர் பலகையை வைக்க கூடாது என்று கூறி ராதாபுரத்தில் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்செல்வி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அதில், தங்கள் பகுதியில் கோவில் அமைந்துள்ள இடத்தில் எந்தவித பதாகைகள், உருவபடம் என எதுவும் வைக்க அனுமதி அளிக்க கூடாது என்று கூறி மனு ஒன்றை அளித்தனர்.  

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தமிழ்செல்வி, இருதரப்பினரிடமும் பேசி சுமூக தீர்வு காணப்பட்ட பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story