அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன் - நமச்சிவாயம் பகிரங்க அறிவிப்பு
அமைச்சர், மற்றும் எம்.எல்.ஏ. பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளேன் என நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அரசியலில் இருந்து ஓய்வு மற்றும் மாற்று அரசியல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கருத்து கேட்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் வில்லியனூர் தொகுதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் தனியார் ஓட்டலில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இதில் மாநில ஆதரவாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் அரசியல் ஓய்வு, மாற்று அரசியல் பிரவேசம் குறித்து கருத்துகளை கேட்டார். அதற்கு அவரின் ஆதரவாளர்கள் அரசியல் ஓய்வு குறித்து ஒருபோதும் யோசிக்கக்கூடாது என்றனர்.
கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக அரசியல் பயணத்தை தொடர்வதா? மாற்று அரசியல் பிரவேசம் தொடர்பாக ஆலோசித்து வருகிறேன். அதன்படி எனது ஆதரவாளர்களின் ஆலோசனைப்படி அரசியல் நிலைப்பாடு இருக்கும். விரைவில் எனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எனது முடிவுக்கு ஆதரவாளர்கள் அதிகப்படியான ஆதரவளித்தால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கடந்த 4½ ஆண்டுகளாக என்னை நம்பியிருந்தவர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. இறுதிகட்டத்தில் இந்த முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அமைச்சர் பதவியில் இருந்து இனி எதுவும் செய்ய முடியாது என தெரிந்துதான் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நமச்சிவாயம் இன்று (திங்கட்கிழமை) அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story