துக்க வீட்டுக்கு சென்ற போது விபத்து: லாரி மீது கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு தாய் உள்பட 3 பேர் படுகாயம்


துக்க வீட்டுக்கு சென்ற போது விபத்து: லாரி மீது கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் சாவு தாய் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jan 2021 9:19 PM GMT (Updated: 27 Jan 2021 9:21 PM GMT)

வில்லுக்குறி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

திங்கள்சந்தை, 

தென்காசி அருகே மேலகரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சலீம். அரசு போக்குவரத்து கழக ஊழியர். இவருடைய மனைவி மன்சூரா (வயது 46). இவர்களுக்கு முகமது ஆதம்பா (22) என்ற மகனும், பாத்திமா (20), ஷகிலா(18) என்ற மகள்களும் இருந்தனர். முகமது ஆதம்பா என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் மார்த்தாண்டத்தை சேர்ந்த மன்சூராவின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மன்சூரா மற்றும் மகன் முகமது ஆதம்பா, மகள்கள் பாத்திமா, ஷகிலா ஆகியோர் காரில் புறப்பட்டனர். 

லாரி-கார் மோதல்

காரை தென்காசியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஓட்டினார். காரின் முன் இருக்கையில் முகமது ஆதம்பா அமர்ந்து இருந்தார். பின்னால் அவருடைய தாய் மற்றும் சகோதரிகள் இருந்தனர். வில்லுக்குறி அருகே காரவிளை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சிமெண்ட் மூடைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்றது. 

லாரியை முந்திச் செல்ல கார் முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்பக்க பகுதியில் மோதியது. இந்த விபத்தில் முகமது ஆதம்பா, அவருடைய தாய், மகள்கள் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

என்ஜினீயரிங் மாணவர் சாவு

இதனை கண்ட பொதுமக்கள் இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்்து சென்று பொதுமக்களின் உதவியுடன் காரில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த முகமது ஆதம்பாைவ மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story