களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி


களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Feb 2021 5:46 AM GMT (Updated: 4 Feb 2021 6:13 AM GMT)

களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காட்டில் வடக்கு பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடியாகும். கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

தண்ணீர் திறப்பு

அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். நாங்குநேரியான் கால்வாய், மடத்து கால்வாய், பச்சையாறு ஆகியவற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

இதன்மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 115 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பாஸ்கர் மற்றும் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story