கோயம்பேடு 100 அடி சாலையில் லாரி சக்கரத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்தவரால் பரபரப்பு


கோயம்பேடு 100 அடி சாலையில் லாரி சக்கரத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2021 5:04 AM GMT (Updated: 5 Feb 2021 5:04 AM GMT)

கோயம்பேடு 100 அடி சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்து கொண்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை சாலையை கடந்து செல்ல முயன்ற 45 வயது மதிக்கத்தக்க நபர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானதாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர் யார்?, விபத்து நடந்தது எப்படி? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

அதில் நடந்தது விபத்து அல்ல, ஓடும் லாரி முன் பாய்ந்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்கொலை

கோயம்பேடு 100 அடி சாலையில் அதிகாலை 5 மணியளவில் பஸ்கள், கார்கள், லாரிகள் என வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அப்போது லுங்கி அணிந்தபடி சாலையோரம் நின்று கொண்டு இருக்கும் அந்த நபர், அந்த வழியே செல்லும் வாகனங்களை நோட்டமிடுகிறார்.

சிறிதுநேரத்துக்கு பிறகு லாரி ஒன்று வருவதை கண்ட அந்த நபர், அவசர அவசரமாக சாலையின் நடுவில் சென்று அந்த லாரியின் முன்பக்க சக்கரத்தின் முன்பு சாலையில் படுத்துகொள்கிறார். அவரது தலை மற்றும் உடல் மீது லாரியின் அனைத்து சக்கரங்களும் ஏறி இறங்கியதில் அவர் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோகும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தற்கொலை செய்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக ஓடும் லாரியில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story