எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின்படி வழங்கப்படாத பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து சிறப்பு தேர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும்


எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின்படி வழங்கப்படாத பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து சிறப்பு தேர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 8 Feb 2021 6:17 AM GMT (Updated: 8 Feb 2021 6:18 AM GMT)

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படாத பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து சிறப்பு ேதர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர்கள் ஆறுமுகம், மகாராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பழனிராஜன் ஆகியோர் பேசினர். மாநில பொதுச்செயலாளர் குமார் சங்க செயல் அறிக்கையை வாசித்தார். பொருளாளர் சிகினம் சீனிவாசலு, சங்க வரவு- செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னேற்றத்தை திட்டமிட்டு தடுக்கும் திட்டமான அரசு வேலையில் கடை நிலைப்பணிகளில் தனியார்மயம் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும். அரசு ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டின்படி அனைத்து நிலை பணி நியமனங்களிலும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய பணியிடங்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் வழங்கப்படாததால், தொடர்ந்து வருடா வருடம் பின்னடைவு பணியிடங்களாக சேர்ந்துள்ள, பணியிடங்களை முழுமையாக கண்டறிந்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அப்பணியிடங்களை சிறப்பு தேர்வு மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.

35 தீர்மானங்கள்

புதிய கல்விக்கொள்கையை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும். சாதிய வன்கொடுமைகள் மற்றும் ஆவணக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் பள்ளிக்கு சென்ற நாளான நவம்பர் 7-ந் தேதிைய மாணவர் நாளாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 35 தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு கல்வித்துறை எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரவி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Next Story