9, 11-ம் வகுப்புகள்-கல்லூரிகள் தொடக்கம்


புதுக்கோட்டை அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கு வந்த மாணவர்களை படத்தில் காணலாம்.
x
புதுக்கோட்டை அரசு பெண்கள் கலைக் கல்லூரிக்கு வந்த மாணவர்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 9 Feb 2021 6:51 AM GMT (Updated: 9 Feb 2021 6:51 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் நேற்று தொடங்கப்பட்டது. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை:
பள்ளி-கல்லூரிகள் தொடக்கம்
 கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டன. அதன் பின்னர் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு, அந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 2-ம் கட்டமாக 9, 11-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேற்று (திங்கட்கிழமை) முதல்   திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 348 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர். பள்ளி நுழைவாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை கழுவ கிருமி நாசினி கொடுக்கப்பட்டன. மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். முதல் நாளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது எப்படி என்பது தொடர்பாக அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.
கல்லூரிகள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கியது. இங்கும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை, கையில் கிருமிநாசினி கொடுக்கப்பட்டது. மேலும் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. முககவசம் இல்லாதவர்களுக்கு கல்லூரி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது. வகுப்புகளில் இடைவெளி விட்டு மாணவர்கள் அமர்ந்திருந்து ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனித்தனர்.
கீரமங்கலம் 
கீரமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், மேற்பனைக்காடு, கொத்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், சேந்தன்குடி, குளமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று தொடங்கப்பட்டது.  பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியில் வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதே போல ஆசிரியர்களுக்கும் உடல் வெப்பநிலைப் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
வடகாடு, திருவரங்குளம், ஆதனக்கோட்டை 
வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல் போன்ற பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 9- மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு உற்சாகமாக வருகை தந்த மாணவ-மாணவிகளை அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் வரவேற்றனர். 
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் 80 சதவீதம் ேபர் வந்தனர். இதேபோல் ஆதனக் கோட்டை, பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளிக ளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.
அரிமளம்
அரிமளம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டுவரும் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர். 
பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டதால் மன மகிழ்ச்சி அடைவதாகவும், பள்ளியில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் நடத்துவது திருப்தி அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
அறந்தாங்கி, அன்னவாசல்
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் நேற்று 9, 11-ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். 
அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் நேற்று பள்ளிக்கு சென்றனர். 10-மாதங்களுக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். 
மேலும் நண்பர்களையும், தோழிகளையும் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story