வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 26-ந் தேதி கடைசி நாள்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 26-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 11 Feb 2021 12:50 AM GMT (Updated: 11 Feb 2021 12:50 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர், 

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்றோ அல்லது அதற்கும் முன்பாகவோ பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

வயது தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதுக்குள்ளும் இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் ஒராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.

கடைசி நாள்

உதவித்தொகை கோரும் விண்ணப்பதாரர்கள் உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்க கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பத்தை திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் அனைத்து கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து வரும் 26-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) அதே அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

சுய உறுதிமொழி

இந்த உதவிதொகையானது மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை பெற தொடங்கிய காலத்தில் இருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தவறியவர்கள் உடன் பூர்த்தி செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story