குன்னம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா?


குன்னம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா?
x
தினத்தந்தி 11 Feb 2021 7:21 PM GMT (Updated: 11 Feb 2021 7:21 PM GMT)

குன்னம் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக, அக்கட்சியினரிடையே பேசப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்:

வரகூர் தொகுதி குன்னமாக மாறியது
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வரகூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு வரகூர் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2011-ம் ஆண்டு குன்னம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்துறை தாலுகா பகுதிகளும் அடங்கியுள்ளன.
வரகூர் சட்டமன்ற தொகுதி இருந்தபோது 1967-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இத்தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
அ.தி.மு.க., தி.மு.க. தலா ஒரு முறை வெற்றி
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 முறை தேர்தல் நடந்தது. இதில் தலா ஒரு முறை அ.தி.மு.க., தி.மு.க. வெற்றி பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வும் மோதின. தி.மு.க. சார்பில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரும், தே.மு.தி.க. சார்பில் பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜூம் போட்டியிட்டனர். இதில் சிவசங்கர் 81,723 வாக்குகளை பெற்று, துரை.காமராஜை 22,957 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதின. இதில் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரனும், தி.மு.க.வில், அரியலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மறைந்த துரைராஜூம் போட்டியிட்டனர். இதில் ராமச்சந்திரன் 78,218 வாக்குகளை பெற்று துரைராஜை 18,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்திய ஜனநாயக கட்சி சீட் கேட்கிறது
கடந்த முறை இந்த தொகுதியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதின. ஆனால் இந்த முறை குன்னம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, தி.மு.க. தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பேசப்படுகிறது. இந்த தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், அக்கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் இந்த முறை தி.மு.க.வுக்கு குன்னம் தொகுதி ஒதுக்கப்படுவது சந்தேகம் தான் என்று கட்சியினரிடையே பேசப்படுகிறது.
இந்திய ஜனநாயக கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் அதில் பாரிவேந்தரின் மகனும், கட்சியின் தலைவருமான ரவிபச்சமுத்து போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இல்லையென்றால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஞானசேகரனும் சீட் கேட்டு வருவதாக தெரிகிறது.
தி.மு.க.- அ.தி.மு.க.வில்...
குன்னம் தொகுதியில் மீண்டும் தி.மு.க. போட்டியிட்டால் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் போட்டியிடலாம் என்றும், மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாவின் கணவர் ஊட்டி செல்லப்பிள்ளை, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவிச்சந்திரன், செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, கடந்த முறை போட்டியிட்டு மறைந்த துரைராஜூவின் மகன் வக்கீல் குமணன் ஆகியோர் போட்டியிட சீட் கேட்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 
அ.தி.மு.க. சார்பில் தற்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரனே மீண்டும் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க.வினர் கூறிவருகின்றனர். அதை தவிர்த்து வேப்பூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமியும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணனும் போட்டியிட சீட் கேட்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால் பா.ம.க.வும் குன்னம் தொகுதியை கேட்கலாம் என்று தெரிகிறது.
2,73,695 வாக்காளர்கள்
தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,35,240 ஆண் வாக்காளர்களும், 1,38,442 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின (திருநங்கைகள்) வாக்காளர்களும் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளன. தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இதில் 10,128 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


Next Story