கிராவல் மண் எடுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
இலவச வீட்டு மனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கிராவல் மண் எடுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்திற்கு அருகில் உள்ள கல்குழி என்ற இடத்தில் ஏரி புறம்போக்கு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் சிலர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது சாலை பணிக்காக கிராவல் மண் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் நேற்று அப்பகுதி கிராம மக்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிராவல் மண் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், மண் எடுத்ததை கண்டித்தும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் தாசில்தார் கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பட்டா வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்களை எடுத்து வந்து ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வரை, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டத்தை, கிராம மக்கள் கைவிட்டனர். மறியலால் சிறிது நேரம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story