வெளியூர் செல்வதாக கூறி ஏமாற்றி விட்டு நண்பர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது


வெளியூர் செல்வதாக கூறி ஏமாற்றி விட்டு நண்பர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Feb 2021 4:13 PM GMT (Updated: 17 Feb 2021 4:13 PM GMT)

மடத்துக்குளம் அருகே வெளியூர் செல்வதாக கூறி ஏமாற்றி விட்டு, நண்பர் வீட்டில் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மடத்துக்குளம், 
மடத்துக்குளம் அருகே வெளியூர் செல்வதாக கூறி ஏமாற்றி விட்டு, நண்பர் வீட்டில் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நண்பர்கள்
மடத்துக்குளம் அருகே கழுகரை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவருடைய நண்பர் கண்ணாடிபுத்தூரை சேர்ந்த நாகராஜ் (வயது 50). நண்பர்களான இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். மேலும் இருவரும் நெருங்கிப் பழகியதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் சென்று வருவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ்  தனது நண்பர் பொன்ராஜிடம், நான் இன்று வேலைக்கு வரவில்லை வெளியூருக்கு செல்கிறேன் எனகூறியுள்ளார். இதனால் பொன்ராஜ் மட்டும் வேலைக்கு சென்றார். அதே போல் பொன்ராஜ் மனைவியும் வீட்டை பூட்டி, சாவியை வழக்கமாக வைக்கும் அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். 
இந்த நிலையில் வேலைக்கு சென்ற பொன்ராஜ், திடீரென்று வீட்டிற்கு வரும்போது, வீட்டிற்குள் இருந்து நாகராஜ் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அப்போது ஊருக்கு செல்வதாக கூறிய நீங்கள் எப்படி எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள் என்று நாகராஜிடம் பொன்ராஜ் கேட்டார்.  அதற்கு நாகராஜ் ஊருக்குத்தான் கிளம்பினேன்,  வரும் வழியில் தண்ணீர் குடித்துவிட்டு போகலாம் என நினைத்து, உங்களது வீட்டிற்க்கு வந்தேன் என காரணம் சொல்லி அங்கிருந்து சென்று விட்டார். 
இதனால் சந்தேகம் அடைந்த பொன்ராஜ் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 6 கிராம் தங்க நகை காணாமல் போயிருந்தது. இதனால் நாகராஜ் மீது  பொன்ராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
தொழிலாளி கைது
இதையடுத்து மடத்துக்குளம் போலீசில் பொன்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பொன்ராஜ் மற்றும் அவருடைய மனைவி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி, அதன் சாவியை அங்குள்ள  வீ்ட்டில் வைத்து செல்வதை தெரிந்து இருந்த நாகராஜ், சம்பவத்தன்று அவருடைய வீட்டிற்கு சென்று கதவை திறந்து  6 கிராம் நகையை திருடியதாகவும், அந்த நகையை அடகு வைத்து இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் அந்த நகையை போலீசார் மீட்டனர்.

Next Story