கண்மாயில் தண்ணீர் இருந்தும் 2-ம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம்


கண்மாயில் தண்ணீர் இருந்தும் 2-ம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2021 6:36 PM GMT (Updated: 17 Feb 2021 6:45 PM GMT)

காரைக்குடி பகுதியில் கண்மாயில் தண்ணீர் இருந்தும் 2-ம் போக நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

காரைக்குடி,

உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும், உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று முன்னோர் கூறுவதை உண்மையாக நிரூபிக்கும் காலம் தற்போது வந்துள்ளது. அதிக மழை பெய்தாலும் சரி, மழையை இல்லாமல் வறட்சி காணப்பட்டாலும் அதில் பாதிக்கப்படுவது விவசாயி தான். சமீபத்தில் காலம் தவறி பெய்த மழையினால் பலத்த நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் தற்போது கண்மாயில் கடல் போல் தண்ணீர் இருந்தாலும் மீண்டும் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவில்லை. 

சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்கள் குடிமராத்து செய்யப்பட்டு, வரத்துக்கால்வாய்கள் மூலம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் காரணமாக, பெய்த மழையினால் கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கியது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் உழவார பணிகளை மேற்கொண்டனர். 

அதன் பின்னர் குறுகால பயிர்களை பயிரிட்டு தை மாத தொடக்கத்தில் அறுவடை செய்யலாம் என்ற நினைப்பில் இருந்த விவசாயிகளுக்கு அப்போது தொடக்கத்தில் பருவம் தப்பி பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சில பயிர்கள் அழுகியும் போனதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் கடல் போல்  காட்சியளிக்கும் கண்மாயில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டாலும் 2-ம் போக விவசாயத்தை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து காரைக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, ஏற்கனவே பெய்த மழையை பயன்படுத்தி வயல்களில் உழவார பணி செய்து கடன் பெற்று நெல் பயிரிட்டோம். அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான காலத்தில் பெய்த மழையினால் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். இதற்கு இழப்பீடு தொகை இதுவரை வந்து சேரவில்லை. 

கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி காணப்படும் வேளையில் மீண்டும் 2-ம் போக விவசாயத்தை மேற்கொண்டால் குறைந்த கால பட்சமாக கண்மாய்களில் 40 முதல் 80 நாட்கள் வரை தண்ணீர் இருக்க வேண்டும். இனி வரும் காலங்கள் வெயில் காலமாக இருப்பதால் மழைக்கு வாய்ப்பில்லை. இதனால் தற்போது உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தால் அந்த நெல்பயிர்கள் அறுடைக்கு வேண்டிய காலத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தற்போது 2-ம் போக நெல் சாகுபடி செய்ய அச்சமாக உள்ளது என்றனர்.

Next Story