வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி


வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2021 8:01 PM GMT (Updated: 2021-02-18T01:31:45+05:30)

வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இடையே இரட்டை ெரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

நெல்லை:
வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

நெல்லை ரெயில் நிலையத்தில் ஆய்வு

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்  நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை பார்வையிட்ட அவர், அங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்று பார்வையிட்டார்.

முதலாவது நடைமேடையில் ரெயில்வே உபகரணங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொது மேலாளர் ஜான் தாமஸ் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர், ரெயில்களை பராமரிக்கும் இடத்தையும், ஊழியர்களின் குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.
பின்னர் ஜான் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை ரெயில் பாதை

கேரள மாநிலம் புனலூரில் இருந்து நெல்லை ரெயில் நிலையம் வரையிலும் ஆய்வு மேற்கொண்டேன். இங்குள்ள அனைத்து ரெயில் நிலையங்களும் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை-வாஞ்சிமணியாச்சி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாஞ்சி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரையிலும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2022) டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

கொரோனா பரவலால் பயணிகள் ெரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமையை ஆய்வு செய்த பின்னர் பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு விருது

பின்னர் அவர், மதுரை ரெயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 18 தொழிலாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது மதுரை கோட்ட மேலாளர் லெனின், ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதற்கிடையே நெல்லை வந்த பொது மேலாளர் ஜான் தாமசிடம், மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அப்பாதுரை மனு வழங்கினார்.
அந்த மனுவில், ‘மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்னும் இயக்கப்படவில்லை. அதனால் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலை மக்கள் நலன் கருதி 6 நாட்களுக்கு பதிலாக தினசரி இயக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோன்று ரெயில்வே தொழிற்சங்கத்தினரும் பொது மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Next Story