வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு


தாலிச்சங்கிலியை பறிகொடுத்த ரேவதி
x
தாலிச்சங்கிலியை பறிகொடுத்த ரேவதி
தினத்தந்தி 21 Feb 2021 12:04 AM IST (Updated: 21 Feb 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள ராஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். காய்கறி வியாபாரியான இவருக்கு ரேவதி (வயது 28) என்ற மனைவியும், பர்னேஷ் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கதவை தாழ்ப்பாளிட்டு பூட்டாமல் வீட்டிற்குள் சண்முகசுந்தரம், ரேவதி, பர்னேஷ் ஆகியோர் தூங்கியுள்ளனர். கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்து, ரேவதி கழுத்தில் கிடந்த 1¾ பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார்.

அப்போது டார்ச் லைட் வெளிச்சம் மற்றும் சத்தம் கேட்டு சண்முகசுந்தரம் எழுந்தார். அப்போது மர்மநபர் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் பிடிப்பதற்குள், மாவட்டத்தில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால், திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாவட்டம் மாறிவருகிறது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் போலீஸ் தனிப்படை அமைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடித்து, மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story