தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார்


தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார்
x
தினத்தந்தி 21 Feb 2021 5:06 PM GMT (Updated: 21 Feb 2021 5:06 PM GMT)

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி,

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவிற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்குகிறார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய், திருக்கானூர்பட்டி பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேசியர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகளும், 400 வீரர்களும் பதிவு செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே மினிலாரிகள் மூலம் காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகளை வரிசையாக வாடிவாசலுக்கு அழைத்து செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையில் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடைத்துறையினரும் முகாம் அமைத்துள்ளனர்.

தென்னை நார்கள்

வெயிலின் தாக்கத்தினால் காளைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காளைகளை அழைத்து வரக்கூடிய பகுதியில் துணியினால் பந்தல் போடப்பட்டுள்ளது. தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அவர்களின் தண்ணீர் தாகத்தை போக்க ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதாகோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்த நார்களால் காளைகளுக்கும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும். காளைகள், பார்வையாளர்கள் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

300 போலீசார்

காளைகளை பிடிப்பதற்காக பதிவு செய்துள்ள வீரர்களும் முதல் சுற்றிலேயே பங்கேற்க வேண்டும் என்பதற்காக நள்ளிரவு முதலே களத்திற்கு வரத் தொடங்கினர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் முக்கியம் என்பதால் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களுடன் வந்தனர். வீரர்களை பரிசோதனை செய்வதற்காக சுகாதாரத்துறையினர் முகாம் அமைந்திருந்தனர்.

வீரர்களை களத்திற்குள் அனுப்ப தனிபாதை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல தனியாக பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு முதலே பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

கோட்டாட்சியர் ஆய்வு

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், பாரதிராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

திருக்கானூர்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள், அன்னை இளைஞர் இயக்கத்தினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Next Story