நாங்குநேரியில் ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


நாங்குநேரியில்  ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 12:48 AM IST (Updated: 22 Feb 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி:
நாங்குநேரியில் ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கண்டக்டரிடம் பணம் பறிப்பு

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டராக, மதுரை திருமங்கலம் ஈசுவரி நகரைச் சேர்ந்த ரமேசும் (50), டிரைவராக உசிலம்பட்டியைச் சேர்ந்த பூல்பாண்டியனும் (40) இருந்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் பஸ் சென்றபோது, பஸ்சில் இருந்த வாலிபர் திடீரென்று கண்டக்டர் ரமேசிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு கீழே இறங்கி தப்பி ஓடினார். பின்னர் அவர், அந்த வழியாக சென்ற லாரியில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச் சென்றார்.

வாலிபர் கைது

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். உடனே சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீஸ்காரர் சந்திரமோகன் ஆகியோர் அங்கிருந்த ஆம்புலன்சில் ஏறி, லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.

இதற்கிடையே சிறிதுதூரத்தில் லாரியை நிறுத்திய டிரைவர், அந்த வாலிபரை கீழே இறக்கி விட்டார். பின்னர் அவர், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச் சென்றார். 

நாங்குநேரி பாணாங்குளம் பகுதியில் சென்றபோது, அந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்த போலீஸ்காரர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் மானூர் அருகே சேதுராயன்புதூர் நியூ காலனியைச் சேர்ந்த புதியவன் மகன் சுந்தர் (24) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த பணப்பையில் ரூ.6 ஆயிரத்து 900 இருந்தது. அதனை மீட்டு கண்டக்டரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

Next Story