விடிய, விடிய மழை கடலூர் ரெயில்வே சுரங்கப்பாதை மூடல் வாகன ஓட்டிகள் அவதி
கடலூர் ரெயில்வே சுரங்கப்பாதை மூடல்
கடலூர்,
கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று காலை 10.45 மணி வரை நீடித்தது. விடிய, விடிய பெய்த மிக கன மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
அதேபோல் கடலூர் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வழக்கத்தை விட அதிகமான மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சிலர் மழைநீரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி சென்றனர். ஆனால் தண்ணீருக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, தள்ளிக்கொண்டு வெளியேறியதையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
அதவாது, கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் செல்லும் வாகன ஓட்டிகள் இம்பீரியல் சாலை, ரெயில்வே மேம்பாலம் வழியாகவும், திருப்பாதிரிப்புலியூரில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் வண்டிப்பாளையம் மெயின்ரோடு, ரெயில்வே மேம்பாலம் வழியாகவும் மாற்றி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் கடந்து சென்றனர்.
மதியத்திற்கு பிறகு தண்ணீர் முழுமையாக வடிந்ததும் மீண்டும் சுரங்கப்பாதை திறக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story