அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியாகுமா? ஆத்தூர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு


அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியாகுமா? ஆத்தூர் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 1:26 AM GMT (Updated: 22 Feb 2021 1:26 AM GMT)

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் (தனி) தொகுதியானது தமிழகத்தின் 82-வது தொகுதியாகும்.

ஆனால் இதேபெயரில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்ற தொகுதி உண்டு. சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, நெல், வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர, பாக்கு மரம் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆத்தூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா 4 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, சுதந்திரத்திற்கு பின்பு 1952 மற்றும் 1957-ல் நடந்த 2 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மகளிர் கலைக்கல்லூரி
மேட்டூர் காவிரி உபரிநீரை ஆத்தூர் பகுதியில் உள்ள வசிஷ்டநதியில் இணைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதேபோல், ராமநாயக்கன்பாளையம் கல்லாற்றின் குறுக்கே கல்லணை கட்டினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். ஆத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். ஆத்தூரில் புறவழிச்சாலை அமைத்து 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இருவழிச்சாலையாகவே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண புறவழிச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

புதிய மாவட்டம்
குறிப்பாக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது ஆத்தூர் தொகுதி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். இதுபோன்ற நீண்ட கோரிக்கை பட்டியலுடன் தொகுதி மக்கள் வருகிற 2021 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். 
ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிட்டாலும், கூட்டணிக்கு ஒதுக்கினாலும் தொகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், தேர்தல் வாக்குறுதியில் ஆத்தூர் தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படுமா? என்று தொகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதுவரை நடந்த தேர்தல்
ஆத்தூர் (தனி) தொகுதியில் இதுவரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

1951-ம் ஆண்டு பி.சுப்ரமணியம் (சுயேச்சை), 1957-ம் ஆண்டு இருசப்பன் (சுயேச்சை), 1962-ம் ஆண்டு எஸ்.அங்கமுத்து நாயக்கர் (காங்கிரஸ்), 1967-ம் ஆண்டு கே.என்.சிவபெருமாள் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு வி.பழனிவேல் கவுண்டர் (தி.மு.க.), 1977, 1980 மற்றும் 1984-ம் ஆண்டு சி.பழனிமுத்து (காங்கிரஸ்), 1989-ம் ஆண்டு ராமசாமி (தி.மு.க.), 1991-ம் ஆண்டு வி.தமிழரசு (அ.தி.மு.க.), 1996-ம் ஆண்டு ராமசாமி (தி.மு.க.), 2001-ம் ஆண்டு ஏ.கே.முருகேசன் (அ.தி.மு.க.), 2006-ம் ஆண்டு எம்.ஆர்.சுந்தரம் (காங்கிரஸ்), 2011-ம் ஆண்டு மாதேஸ்வரன் (அ.தி.மு.க.), 2016-ம் ஆண்டு சின்னதம்பி (அ.தி.மு.க.).
அ.தி.மு.க.-தி.மு.க. போட்டி?
ஆத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 440 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 348 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 800 வாக்காளர்கள் உள்ளனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தி.மு.க. கூட்டணியில் ஆத்தூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது. ஏனென்றால் 5 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் 2011 மற்றும் 2016 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதால் இந்த முறை தி.மு.க. நேரடியாக களம் இறங்க முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகுமா? என்பதை கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகே தெரியவரும்.

Next Story