முசிறி
முசிறி சுண்ணாம்புகார தெரு பகுதியை சேர்ந்த முருகானந்தத்தின் மகன் கவுதம்(வயது 19). கல்லூரி மாணவரான இவர், கடந்த 17-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த முசிறி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ராம்கி என்ற ரகுபதி (23), முசிறி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகுமணி (38) ஆகியோர் கவுதம் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தனிடம் சரண் அடைந்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், முசிறி போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அழகுமணியின் தங்கை மகளிடம், கவுதம் அடிக்கடி கிண்டல் செய்து பேசி வந்துள்ளார். அவ்வாறு பேசுவதை நிறுத்துமாறு அழகுமணி, கவுதமிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அழகுமணி, தனது நண்பர் ரகுபதியுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு குழாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.