வருவாய் அலுவலர் காரை ஜப்தி செய்ய முயற்சி
வருவாய் அலுவலர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை
வருவாய் அலுவலர் காரை ஜப்தி செய்ய முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்தி செய்ய உத்தரவு
மதுரை-சென்னை இருவழிச்சாலையை, நான்குவழிச்சாலையாக மாற்றுவதற்காக கடந்த 2004-ம் ஆண்டு ஏராளமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மதுரை-திருச்சி இடையே கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு சென்டிற்கு ரூ.500 மட்டும் வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நிலத்தை கொடுத்த திருமோகூரை சேர்ந்த ரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஒரு சென்டிற்கு ரூ.20 ஆயிரத்து 909 வழங்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி ரத்தினத்திற்கு மொத்தம் ரூ.77 லட்சத்தை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை வழங்கப்படவில்லை. அதனால் ரத்தினம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள் நில ஆர்ஜிதத்திற்கு ஈடாக பணம் கொடுக்க தவறியதால் அதற்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.97 லட்சத்தை வழங்க உத்தரவிட்டது. இந்த தொகையும் வழங்கப்பட வில்லை. அதனால் இந்த தொகைக்கு ஈடாக மாவட்ட வருவாய் அலுவலரின் கார் மற்றும் அவரது அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
பரபரப்பு
இதைதொடர்ந்து வக்கீல் தனசேகரன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரின் கார் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்வதாக கூறினர். இதனால் பதற்றம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பணத்தை தருவதாக உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து பொருட்களை ஜப்தி செய்யாமல் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story