‘ஆல் பாஸ்’ மகிழ்ச்சி அளித்தாலும் மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்? மாணவர்கள் மனநிலையில் குழப்பம்


‘ஆல் பாஸ்’ மகிழ்ச்சி அளித்தாலும் மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்? மாணவர்கள் மனநிலையில் குழப்பம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:06 PM GMT (Updated: 25 Feb 2021 10:06 PM GMT)

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமலேயே ‘ஆல்பாஸ்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும் மதிப்பெண் எப்படி கணக்கீடப்படும்? என மாணவர்களின் மனநிலையில் குழப்பம் நிலவி வருகிறது.

திருச்சி, 

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமலேயே ‘ஆல்பாஸ்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும் மதிப்பெண் எப்படி கணக்கீடப்படும்? என மாணவர்களின் மனநிலையில் குழப்பம் நிலவி வருகிறது.

ஆல்-பாஸ்

தமிழகத்தில் சட்டமன்றத்தில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வு இன்றி, அனைத்து மாணவ-மாணவிகளும் ‘ஆல்பாஸ்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு வித குழப்பமும் அவர்களை தொற்றிக்கொண்டுள்ளது. அது குறித்து திருச்சி மாவட்ட மாணவ, மாணவிகளின் மனநிலை எப்படி உள்ளது? என்ற கருத்து வருமாறு:-

மதிப்பெண் கணக்கீடு எப்படி?

10-ம் வகுப்பு மாணவி லோகாம்பாள்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடினமாக படித்து வந்தோம். ஆன்லைன் மூலமாக பாடம் கற்று வந்த நாங்கள், கடந்த 1 மாதமாகத்தான் வழக்கமாக பள்ளிக்கு நேரடியாக வந்து பாடம் கற்று வருகிறோம். தற்போது திடீரென ஆல்பாஸ் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்பு எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிப்பது உண்மைதான். ஆனாலும், எங்களுக்கு ஒரு அச்சமும், குழப்பமும் உள்ளது. ஆல்பாஸ் மூலம் 11-ம் வகுப்பு சென்றாலும் 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான், அங்கு எங்களுக்கு பிடித்த பாடத்திட்ட குரூப் கிடைக்கும்.

11-ம் வகுப்பு மாணவி முபசீரா: ஏற்கனவே, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே பாஸ் ஆனோம். தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்து படித்து வருகிறேன். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற பயம் இருந்தது. தற்போது ஆல்பாஸ் அறிவிப்பு மிகவும் சந்தோஷமாக உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
படிப்பு பாழாகி விட்டது

தேர்வு நடத்துவது அவசியம்

ஆசிரியை சுகிர்தாபாய்: கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இந்த ஆண்டும் அதே அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாணவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை தரலாம். ஆனால், ஒரு ஆசிரியராக இதைபார்க்கும்போது, மாணவ, மாணவிகளின் பள்ளி படிப்பு பாழாகி விட்டதே என்ற வேதனை உள்ளது. ஏற்கனவே, 11 ஆண்டுகள் தேர்வு இன்றியே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பிளஸ்-2 படிக்கும்போது அவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். எனவே, ஆல்பாஸ் என அறிவித்தாலும் மாணவர்களின் கல்வித்திறனை சோதிக்கும் வகையிலும் மதிப்பெண் அளவீடு செய்யும் வகையிலும் பள்ளி அளவிலாவது தேர்வு நடத்துவது அவசியம்.

முதுகலை ஆசிரியர் ஜெயக்குமார்:- நான், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் கற்பித்து வருகிறேன். பாடத்திட்டம் குறைக்கப்பட்டாலும், அவர்கள் நீட், ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் இல்லாத பாடங்களையும் கற்பித்து வந்தோம். மாணவர்களுக்கு மன உளைச்சல் மட்டுமின்றி அச்சமும் இருந்தது. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு என 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளாமல் நேரடியாக அவர்கள் பிளஸ்-2 தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள். மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிக்கும். பொதுத்தேர்விற்காக படிக்கும் ஆர்வம் குறைந்து போகும். 

10-ம் வகுப்பு மாணவி ஆர்.ரித்திகா (தொட்டியம்):- பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் கடினமான பாடங்களையும் படித்தோம். தற்போது அறிவித்துள்ள ஆல் பாஸ் அறிவிப்பால் சந்தோஷமாக இருந்தாலும் எங்களது திறமையை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியவில்லை என்பது ஒரு கவலையாக உள்ளது. 

அரசு பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார்(லால்குடி):- தற்போது தான் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கும். மேலும் 10-ம், 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலும் வகுப்புகளில் பாட திட்டங்களை பயிற்சி மேற்கொள்ளாமலும் மேல் வகுப்பிற்கு செல்வதால் அடிப்படை பாடத்திட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளின் நலம் கருதி பள்ளி அளவிலான எழுத்து தேர்வுகள் நடத்த வேண்டுமெனவும், தொடர்ந்து 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.

Next Story